1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். 5 வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். 6 அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.
பேதுருவின் பிரசங்கம்
14 அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது.
என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும்,
கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும்,
சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ
அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.
22 “இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். 24 தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது. 25 அவரைக்குறித்து தாவீது:
கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்;
நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்;
26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது,
என் நாக்கு களிகூர்ந்தது,
என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்,
உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;
28 ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்;
உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29 சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது. 30 அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால், 31 அவன்
அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து,
அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
32 இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம். 33 அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.
34 தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே.
நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,
35 நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று
கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36 ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான். 37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
42 அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். 43 எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். 45 நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, 47 தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
<- அப்போஸ்தலருடைய நடபடிகள் 1அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 ->