Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 2
கர்த்தருடைய வருகை
1 அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான். 5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது. 8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். 11 ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
நிலைகொண்டிருங்கள்
13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம். 14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார். 15 ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், 17 உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.

<- 2 தெசலோனிக்கேயர் 12 தெசலோனிக்கேயர் 3 ->