Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 2
கள்ளப்போதகர்களும், அவர்களுடைய அழிவும்
1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். 2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். 3 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது. 4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; 7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். 10 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். 11 அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே. 12 இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். 13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; 14 விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். 15 செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, 16 தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. 17 இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 18 வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள். 19 தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. 20 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். 21 அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும். 22 நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.

<- 2 பேதுரு 12 பேதுரு 3 ->