Link to home pageLanguagesLink to all Bible versions on this site

2 யோவான்
ஆசிரியர்
அப்போஸ்தலனாகிய யோவான் ஆசிரியர் ஆவார். 2 யோவான் 1 இல் “மூப்பர்” என்று அவர் தன்னை விவரிக்கிறார். நிருபத்தின் தலைப்பு “2 யோவான்.” அப்போஸ்தலனாகிய யோவானின் பெயரைச் சுமக்கும் 3 நிருபங்களின் வரிசையில் இது இரண்டாவது ஆகும். 2 யோவான் நிருபத்தின் கவனமானது, தவறான போதகர்கள் யோவானின் சபைகளிடையே ஒரு ஊழியத்தை நடத்துகிறார்கள், மாற்றங்களை செய்ய முயலுகிறார்கள், கிறிஸ்தவ உபசரிப்பை தங்களுக்கு சாதகமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதாகும்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 85-95 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
அநேகமாக எபேசுவில் எழுதப்பட்டிருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
இரண்டாவது யோவான், அன்பிற்குறிய பெண் மற்றும் அவரது குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு சபைக்கு எழுதப்பட்ட கடிதமாகும்.
எழுதப்பட்ட நோக்கம்
யோவானின் இரண்டாவது நிருபம் இந்த “பெண்மணி மற்றும், அவருடைய பிள்ளைகளின்” உண்மைத்தன்மையைப் பாராட்டுவதைக் காட்டவும், அன்பில் நடப்பதை உற்சாகப்படுத்தவும், தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் யோவான் எழுதினார். அவர் அவளுக்கு, தவறான போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை கொடுத்து, மற்றும் அவர் விரைவில் அவளை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கிறார். யோவான் அவளை “சகோதரி” என்று வாழ்த்துகிறார்.
மையக் கருத்து
விசுவாசியின் பகுத்தறிவு
பொருளடக்கம்
1. வாழ்த்துரை — 1-3
2. அன்பில் சத்தியத்தை பாதுகாத்தல் — 4-11
3. இறுதி வாழ்த்துக்கள் — 12-13

அத்தியாயம் 1
1 நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், 2 தெரிந்துகொள்ளப்பட்டத் தாயாருக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது: 3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும், சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடும்கூட உங்களோடு இருப்பதாக. 4 பிதாவினால் நாம் பெற்ற கட்டளையின்படி உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். 5 இப்பொழுதும் தாயாரே, நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று, உமக்குப் புதிய கட்டளையாக எழுதாமல், ஆரம்பம் முதல் நமக்கு உண்டாயிருக்கிற கட்டளையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 6 நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே. 7 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான். 8 உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள். 9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 10 ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான். 12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனம் இல்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருப்பதற்காக உங்களிடம் வந்து, முகமுகமாகப் பேசலாம் என்று நம்பியிருக்கிறேன். 13 தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.