Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 3
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டுதல்
1 பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். 2 அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான். 3 தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது. 4 முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான். 5 ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து, 6 அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது. 7 அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், சுவர்களையும், கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான். 8 மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான். 9 ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான். 10 அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான். 11 அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது. 12 மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது. 13 இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது. 14 இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான். 15 ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, 16 சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான். 17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.

<- 2 நாளாகமம் 22 நாளாகமம் 4 ->