Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 12
சீஷாக் எருசலேமைத் தாக்குதல்
1 ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். 2 அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்ததால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்தின் ஆட்சியில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதாயிரம் குதிரைவீரர்களோடும் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்; 3 அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லிபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள். 4 அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான். 5 அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 6 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள். 7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் யெகோவா கண்டபோது, யெகோவாவுடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். 8 ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார். 9 அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 10 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான். 11 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள். 12 அவன் தன்னைத் தாழ்த்தினதால், யெகோவா அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது. 13 அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோன் வம்சத்தாளான அவனுடைய தாயின் பெயர் நாகமாள். 14 அவன் யெகோவாவை தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 15 ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது. 16 ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

<- 2 நாளாகமம் 112 நாளாகமம் 13 ->