11 வயது முதிர்ந்த ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவனுடைய மகன்கள் வந்து தேவனுடைய மனிதன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லா செய்கைகளையும், அவன் ராஜாவோடு சொன்ன வார்த்தைகளையும் தங்களுடைய தகப்பனுக்கு அறிவித்தார்கள். 12 அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால், 13 அவன் தன்னுடைய மகன்களிடம்: கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுத்தபின்பு, அவன் அதின்மேல் ஏறி, 14 தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான். 15 அப்பொழுது அவனை நோக்கி: என்னோடு வீட்டுக்கு வந்து அப்பம் சாப்பிடும் என்றான். 16 அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவும், உம்மோடு உள்ளே வரவுமாட்டேன்; இந்த இடத்திலே உம்மோடு நான் அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். 17 ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், அங்கே தண்ணீர் குடிக்காமலும், நீ போன வழியாகத் திரும்பிவராமலும் இரு என்று யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான். 18 அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் யெகோவாவுடைய வார்த்தையாக என்னோடு சொன்னான் என்று அவனிடம் பொய் சொன்னான். 19 அப்பொழுது அவன் இவனோடு திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தான். 20 அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக் கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானதால், 21 அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் யெகோவாவுடைய வார்த்தையை மீறி, 22 அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின இடத்திற்கு நீ திரும்பிப் போய், அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்ததால், உன்னுடைய சடலம் உன்னுடைய பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 23 அவன் சாப்பிட்டுக் குடித்து முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக் கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக்கொடுத்தான். 24 அவன் போனபிறகு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவனுடைய சடலம் வழியில் கிடந்தது; கழுதை அதின் அருகில் நின்றது; சிங்கமும் சடலத்தின் அருகில் நின்றது. 25 அந்த வழியே கடந்துவருகிற மனிதர்கள், வழியிலே கிடந்த சடலத்தையும், சடலத்தின் அருகில் நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். 26 அவனை வழியிலிருந்து திரும்பச்செய்த தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் யெகோவாவுடைய வாக்கை மீறிய தேவனுடைய மனிதன் தான், யெகோவா அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, யெகோவா அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டது என்று சொல்லி, 27 தன் மகன்களை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள். 28 அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவனுடைய சடலத்தையும், சடலத்தின் அருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டான்; அந்தச் சிங்கம் சடலத்தை சாப்பிடவும் இல்லை, கழுதையை தாக்கவும் இல்லை. 29 அப்பொழுது வயது முதிர்ந்த அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனிதனின் சடலத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும், அதைத் தன்னுடைய பட்டணத்திற்குக் கொண்டுவந்து, 30 அவனுடைய சடலத்தைத் தன்னுடைய கல்லறையில் வைத்தான். அவனுக்காக: ஐயோ, என்னுடைய சகோதரனே என்று புலம்பி, துக்கம்கொண்டாடினார்கள். 31 அவனை அடக்கம்செய்த பின்பு, அவன் தன்னுடைய மகன்களை நோக்கி: நான் மரணமடையும்போது, தேவனுடைய மனிதன் அடக்கம்செய்யப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்செய்து, அவனுடைய எலும்புகளின் அருகில் என்னுடைய எலும்புகளையும் வையுங்கள். 32 அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய எல்லாக் கோவில்களுக்கும் விரோதமாகக் கூறிய யெகோவாவுடைய வார்த்தை நிச்சயமாக நிறைவேறும் என்றான்.
33 இதற்குப்பின்பு, யெரொபெயாம் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் மக்களில் தாழ்ந்தவர்களை மேடைகளின் ஆசாரியர்களாக்கினான்; எவன்மேல் அவனுக்கு விருப்பம் இருந்ததோ அவனைப் பிரதிஷ்டை செய்தான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியர்களானார்கள். 34 யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அவர்களை நீக்கி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமானது.
<- 1 இராஜாக்கள் 121 இராஜாக்கள் 14 ->