Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 2
1 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். 4 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
தேவனுடைய ஞானமும், உலக ஞானமும்
6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, 7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 8 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 9 எழுதியிருக்கிறபடி:
“தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக்
கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை,
அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். 11 மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். 15 ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக
அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

<- 1 கொரிந்தியர் 11 கொரிந்தியர் 3 ->