Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 5
ரூபனின் சந்ததியினர்
1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. 2 யூதா தன்னுடைய சகோதரர்களிலே பலவானாக இருந்ததால் தலைமைத்துவம் அவனுடைய சந்ததியில் உண்டானது; ஆகிலும் மூத்தமகன் என்கிற பிறப்புரிமை யோசேப்பிற்குரியதாக மாறினது. 3 இஸ்ரவேலின் முதலில் பிறந்தவனான ரூபனின் மகன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 4 யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேயி. 5 இவனுடைய மகன் மீகா; இவனுடைய மகன் ராயா; இவனுடைய மகன் பாகால். 6 இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான். 7 தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும், 8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் மகன் பேலாவும்; இவனுடைய சந்ததியார் ஆரோவேரிலும், நேபோவரை, பாகால்மெயோன்வரை தங்கியிருந்தார்கள். 9 கிழக்கே ஐப்பிராத்து நதி துவங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது. 10 சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள்.
காத்தின் சந்ததியினர்
11 காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காயிவரை தங்கியிருந்தார்கள். 12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள். 13 அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர். 14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்திற்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள். 15 கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான். 16 அவர்கள் கீலேயாத்திலே இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள். 17 இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள்.

18 ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேராக இருந்தார்கள். 19 அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாபீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது, 20 அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார். 21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள். 22 யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள்.

மனாசேயின் பாதிக்கோத்திரம்
23 மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் வரை, சேனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள். 24 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள். 25 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு துரோகம்செய்து, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச மக்களின் தேவர்களைப் பின்பற்றி கெட்டுப்போனார்கள். 26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

<- 1 நாளாகமம் 41 நாளாகமம் 6 ->